வீடு கட்டுவதற்காக அரசு வழங்கிய நிலத்தை ஏற்க 95 ஆயிரம் பேர் மறுப்பு ஆந்திர அரசுக்கு புது நெருக்கடி
|ஆந்திராவில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் பேருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.
அமராவதி,
ஆந்திராவில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் பேருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது. தலா 1½ சென்ட் நிலம் வழங்கப்பட்ட நிலையில், இதில் பெரும்பாலான இடங்களில் வீடு கட்டும் பணிகளும் தொடங்கி விட்டன.
ஆனால் இதில் 95,106 பேர், அரசு வழங்கிய நிலத்தை ஏற்க மறுத்து உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொலை தூரத்தில் வழங்கப்பட்டதாலும், கல்லறை தோட்டத்துக்கு அருகில் வழங்கப்பட்டதாலும் அந்த நிலத்தை ஏற்க மறுத்து உள்ளனர்.
இது ஆந்திர அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் சுமார் 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த புகாைர கூறியுள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இந்த மக்களுக்கு வழங்குவதற்காக மாற்று இடங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவற்றை வாங்கி அந்த மக்களுக்கு வழங்கப்படும் எனவும் மாநில சிறப்பு தலைமை செயலாளர் (வீட்டுவசதி) அஜய் ஜெயின் கூறியுள்ளார்.