நில முறைகேடு விவகாரம்: சித்தராமையா மனு மீது இன்று மீண்டும் விசாரணை
|கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மனு மீது இன்று அம்மாநில ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு,
மைசூருவில் மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) லே-அவுட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. தன்னுடைய 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இதுபற்றி தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வக்கீல்களின் வாதம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடைசியாக கடந்த 9-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அன்றைய தினம் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆஜராகி வாதிட்டார். ஏற்கனவே சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, கவர்னர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்ட வக்கீல்கள் தங்களின் வாதங்களை நிறைவு செய்தனர்.
இந்நிலையில் சித்தராமையாவின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய தினம் சித்தராமையா வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி மீண்டும் தனது வாதத்தை எடுத்து வைக்க உள்ளார். எதிர்தரப்பு வாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் சில முக்கியமான அம்சங்களை எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்றே இந்த வழக்கின் விசாரணை நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.