நில அபகரிப்பு வழக்கு ரத்து: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
|நில அபகரிப்பு வழக்கு ரத்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேசுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயப்பிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு ரத்து
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து கடந்த செப்டம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டது.
மேல்முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.