ரெயில்வேயில் பணி நியமனங்களில் லஞ்சம்: லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு
|ரெயில்வேயில் பணி நியமனங்களில் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு போட்டுள்ளது. இதில் அவருக்கு சொந்தமான 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாட்னா,
புதிய ஊழல் வழக்கு
ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்(வயது 73). இவர் பீகாரில் முதல்-மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 22-ந் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் மீது புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இந்த ஊழல் வழக்கு, அவர் 2004-09 கால கட்டத்தில் மத்தியில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது தொடர்புடையதாகும். அப்போது அவர் ரெயில்வே துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சமாக நிலங்களை பெற்றதாகவும், அந்த நிலங்கள் அவரது உறவினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்து அதன்பேரில்தான் புதிய வழக்கு போடப்பட்டுள்ளது.
அதிரடி சோதனை
இந்தநிலையில் டெல்லி, பாட்னா, கோபால்கஞ்ச் நகரங்களில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாட்னாவில் சர்க்குலர் சாலையில் உள்ள ராப்ரி தேவி இல்லத்தில் சி.பி.ஐ.யின் 8 அதிகாரிகள் குழு சோதனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சோதனைகளில் சிக்கியது என்ன என்பது குறித்து தகவல் இல்லை.