ரெயில்வே பணி நியமன ஊழல்: டெல்லி, பீகார் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
|ரெயில்வே துறை முறைகேடு வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சம்பந்தபட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 காலகட்டத்தில் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கான பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ரெயில்வேயின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாததுடன், அந்த நபர்கள் நிரந்தரமும் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சில மாதங்களுக்கு முன்னர் லாலு பிரசாத்திடமும், அவரது மனைவி ராப்ரி தேவியிடமும் விசாரணை நடத்தியது. அதேவேளையில் அவர்களின் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடி பணம், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக பீகார், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி உள்பட 9 மாநிலங்களில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன்படி பீகாரின் பாட்னா, போஜ்பூர் மற்றும் ஆரா, டெல்லி, அரியானாவின் குருகிராம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நொய்டா ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளரான பிரேம் சந்த் குப்தாவுடன் தொடர்புடைய இடங்களில் டெல்லி-என்சிஆர் பகுதியில் சோதனை நடைபெற்று வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பீகாரில் ஆர்ஜேடி எம்எல்ஏ கிரண் தேவி மற்றும் அவரது கணவருடன் தொடர்புடைய இடங்களையும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.