பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி, அமலாக்கத்துறை முன் ஆஜர்
|ரெயில்வேயில் வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி ஆஜர் ஆனார். அவரிடம் துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.
புதுடெல்லி,
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் (2004-09 ) ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் ரெயில்வே துறையில் பீகாரைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதற்காக, அவர்களிடம் இருந்து நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக லாலு பிரசாத், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா பாரதி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ராப்ரிதேவிக்கு (வயது 68) அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. அதன்பேரில் ராப்ரி தேவி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜர் ஆனார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அவர் மதிய உணவுக்காக வெளியே வந்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
பல மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது, அதிகாரிகள் அவரிடம் துருவித்துருவி கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்று பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் ராப்ரி தேவியின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஷ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா யாதவ், ராகினி யாதவ் ஆகியோரையும் அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியதும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் நடத்தியது நினைவுகூரத்தக்கது.