வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு; லாலு பிரசாத்திடம் 10 மணிநேர அமலாக்க துறை விசாரணை நிறைவு
|இதற்காக பாட்னா நகரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் இன்று காலை 11 மணிக்கு சென்றார்.
பாட்னா,
ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம் லஞ்சமாக பெறப்பட்டது.
இவ்வழக்கில், லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், பீகார் முன்னாள் முதல்-மந்திரிகளான லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்பட அவர்களது மகள் மிசா பாரதி மற்றும் 13 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, லாலு, ராப்ரி தேவி மற்றும் மிசா பாரதிக்கு டெல்லி கோர்ட்டு ஒன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்காக ரூ.50 ஆயிரம் தனிநபர் ஜாமீன் தொகையை தலா ஒவ்வொரு குற்றவாளியும் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதற்கு இணையான பிணை தொகையையும் செலுத்த உத்தரவிட்டது. மற்ற 13 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக பாட்னா நகரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் இன்று காலை 11 மணிக்கு சென்றார்.
அவர் அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஏறக்குறைய 10 மணிநேரம் விசாரணைக்கு பின்னர் அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து லாலு பிரசாத் இன்று இரவு தன்னுடைய காரில் புறப்பட்டார். அவரை காண கட்சி தொண்டர்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். அவருக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர்.
இதன்பின்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் தன்னுடைய காரை நோக்கி சென்றார். அமலாக்க துறை விசாரணை நிறைவுக்கு பின்னர், பாட்னா நகரில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு அவர் திரும்பினார்.