7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பீகார் திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்
|சுமார் 7 மாதங்களுக்கு பிறகு லாலு பிரசாத், சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவுக்கு மீண்டும் திரும்பினார்.
பாட்னா,
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு லாலு பிரசாத், சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவுக்கு மீண்டும் திரும்பினார்.
விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் வௌியே வந்த லாலு பிரசாத் யாதவை அங்கு ஏராளமாக திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர். அவருடன் அவரது இளைய மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வந்தார்.
தொண்டர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்த லாலு பிரசாத், தனது மகனின் காரில், மனைவி ராப்ரி தேவி வசிக்கும் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் பா.ஜ.க. உடனான உறவை முறித்தபோது அவர் ஆட்சியில் நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவை லாலு பிரசாத் யாதவ் வழங்கினார்.
அதேபோல, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் நிதிஷ்குமாரின் முயற்சிக்கு, அவரது முன்னாள் அரசியல் எதிராளியான லாலு பிரசாத் உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.