மீண்டும் வைரலாகும் லலித் மோடி பதிவு...! யாரை கேலி செய்கிறார்...?
|பெட்ரோல் விலை ஏறிடுச்சே! கேஸ் விலையும் ஏறிடுச்சி! அதையெல்லாம் விட லலித் மோடியும் சுஷ்மிதா சென்னும் டேட்டிட்டிங் செய்வது தான் பெரிய பிரச்சினை?
மும்பை
ஜூலை 14 அன்று லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்து இருந்தார். இந்த புது காதல் ஜோடிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மற்றொரு புறம் வசவுகளும் இல்லாமல் இல்லை. நெட்டிசன்கள் பலரும் சுஷ்மிதா சென்னை கடுமையாக டிரோல் செய்தனர். குறிப்பாக பணத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினர். சுஷ்மிதாவும் தனக்கெதிரான எதிர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
லலித் மோடி மணி மோசடி செய்து விட்டு ஊரை விட்டு ஓடி போய் ஒளிந்துக் கொண்டிருக்கும் குற்றவாளியோடு உறவா என்று விமர்சனம் செய்தனர்.அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக லலித் மோடி தன்னுடைய ஒரு போஸ்ட்டில் இதுவரை எந்த நீதிமன்றமும் நான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. தான் பிறக்கும் போதே வசதியான குடும்பத்தில் பிறந்ததாகவும், தான் ஊழல் செய்யவோ அல்லது அதற்காக லஞ்சம் கொடுக்கவோ அவசியமில்லை. ஐபிஎல்-ஐ நடத்தி பிசிசிஐ கஜானாவை நிரப்பி வைத்துவிட்டுதான் வந்துள்ளேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் லலித் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது. அந்த மீமில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சில்லறை பணவீக்கம், கேஸ் சிலிண்டர் விலையேற்றம், இந்திய ரூபாய் மதிப்பு குறைவு இதை பற்றியெல்லாம் இந்தியர்கள் கவலைப்படாமல் லலித் மற்றும் சுஷ்மிதா டேட்டிங் குறித்து அதிக ஆர்வம் போல் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.