சிறுமியை விபசாரத்தில் தள்ளிய பெண்ணுக்கு 14 ஆண்டு சிறை
|சிறுமியை விபசாரத்தில் தள்ளிய பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு
சிறுமியை விபசாரத்தில் தள்ளிய பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
சிறுமியை விபசாரத்தில் தள்ளினார்
பெங்களூரு டி.தாசரஹள்ளியை சேர்ந்தவர் ரோஜி. இவர், ஒரு சிறுமிக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து வந்துள்ளார். அதாவது அந்த சிறுமிக்கு, அழகு நிலையத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக பெற்றோரிடம் ரோஜி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ரோஜியுடன், சிறுமியை பெற்றோர் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சிறுமிக்கு அழகு நிலையத்தில் வேலை வாங்கி கொடுக்காமல் தன்னுடைய வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, விபசாரத்தில் தள்ளி ரோஜி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஆண்டு (2021) ரோஜி வீட்டில் விபசாரம் நடத்தியதாக வந்த புகாைர தொடர்ந்து அவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியும் மீட்கப்பட்டார்.
பெண்ணுக்கு 14 ஆண்டுகள்...
இதுதொடா்பான வழக்கு விசாரணை பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் செசன்சு கோர்ட்டில் பீனியா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தார்கள். இதையடுத்து, இவ்வழக்கு நீதிபதி எஸ்.ரூபா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி எஸ்.ரூபா தீர்ப்பு கூறினார்.
அப்போது சிறுமிக்கு வேலை வாங்கி கொடுப்பதாக அழைத்து வந்து, அவளை சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்து ரோஜி விபசார தொழில் நடத்தியது தெரியவந்திருப்பதால், ரோஜிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் ரோஜிக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.