"லட்டுவில் நான் கலப்படம் செய்திருந்தால்..." - கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்
|திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும் என்று முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட புகாரை திருமலை-திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி மறுத்துள்ளார்.
நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு வந்த அவர் புஷ்கரணியில் நீராடிவிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் வாசலுக்கு வந்து கற்பூரம் ஏற்றி 'நெய்யில் கலப்படம் செய்யவில்லை' எனக் கூறி சத்தியம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது பதவிக்காலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க தயாராக உள்ளேன். ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் புனிதமான லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகக் கூறி அரசியல் செய்கிறார்கள். நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் நானும், எனது குடும்பமும் சர்வ நாசமாகி விடுவோம்" என்று அவர் கூறினார்.
அப்பகுதியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கருணாகர் ரெட்டி, ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி ஆட்சி காலத்திலும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.