லடாக்கில் ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை - துணைநிலை கவர்னர் திட்டவட்டம்
|லடாக்கில் ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை என்று துணைநிலை கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜம்மு,
லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மத்திய அரசும் மறுத்து வருகிறது.
ராகுல் காந்தியின் கருத்தை தற்போது லடாக் துணைநிலை கவர்னர் மிஸ்ராவும் திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'யாருடைய அறிக்கைக்கும் நான் கருத்து தெரிவிக்கமாட்டேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமித்திருப்பதாக நான் காணவில்லை. 1962-ல் என்ன நடந்தாலும் அது தற்போது முக்கியமற்றது. ஆனால் இன்று நாம் நமது நிலத்தை கடைசி அங்குலம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்' என தெரிவித்தார்.
நமது ஆயுதப்படைகள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறிய மிஸ்ரா, அவர்களின் மன உறுதி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், ஒவ்வொரு சதுர அங்குல நிலத்தையும் பாதுகாப்பதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார்.