மாணவர்கள் விடுதியில் வசதி குறைபாடு: அரசு அதிகாரி பணியிடை நீக்கம்
|மங்களூருவில் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதி குறைபாடால் அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மந்திரி ஜமீர் அகமதுகான் உத்தரவிட்டார்.
மங்களூரு-
மங்களூருவில் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதி குறைபாடால் அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மந்திரி ஜமீர் அகமதுகான் உத்தரவிட்டார்.
சுற்றுப்பயணம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் வாலன்சியாவில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கழிவறை பராமரிப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விடுதி வார்டனிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக கர்நாடக வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை மந்திரி ஜமீர் அகமதுகான் வந்தார். அவர் திடீரென வாலன்சியா பிற்படுத்தப்பட்ேடார் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கழிவறை சுத்தம் இல்லாமல் அறை முழுவதும் அசுத்தமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பார்த்த மந்திரி ஜமீர் அகமது கான் விடுதி வார்டன் அசோக்கிடம் கோபம் அடைந்தார். பின்னர் இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என மந்திரி ஜமீர் அகமதுகான் விடுதி வார்டனிடம் கூறினார்.
அடிப்படை வசதி இல்லை
அப்போது விடுதியில் தரமான உணவு வழங்குவதில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை அசைவ உணவு வழங்குவதாகவும், ஆனால் அட்டவணைப்படி வாரத்திற்கு ஒரு முறை அசைவ உணவு வழங்க வேண்டும் என மாணவர்கள், மந்திரி ஜமீர் அகமதுகானிடம் குற்றம் சாட்டினர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக விடுதியில் போர்வை, தலையணை வழங்கவில்லை. விடுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை எனவும் கூறினர். இதையடுத்து மந்திரி ஜமீர் அகமதுகான், மங்களூரு தாலுகா வளர்ச்சி அதிகாரி மஞ்சுநாத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் விடுதி வார்டன் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மந்திரி ஜமீர் அகமதுகான் கூறினார்.