தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை-2 பேர் கைது
|பெங்களூருவில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:-
தொழிலாளி
பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மதுவிடுதியில் ஊழியரான வேலை செய்தார். இதற்கிடையே அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றார். அதன்பிறகு அவர் கூலி வேலை செய்து வந்தார். அவர் வழக்கமாக அந்த விடுதிக்கு சென்று மது அருந்தி வந்தார். அப்போது அவருக்கும், கிரீஷ் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கல்லை போட்டு கொலை
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கிரீஷ் மற்றும் சங்கர் சேர்ந்து, விஜய்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த கல்லை எடுத்து விஜய்குமார் தலையில் போட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் விஜய்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து மதுக்கடையில் இருந்தவர்கள் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
2 பேர் கைது
அவர்கள் விஜய்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து கிரீஷ், சங்கர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.