கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் ஆய்வகம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
|கர்நாடக அரசு பள்ளிகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக அரசு பள்ளிகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
அரசு ஊக்குவிக்கும்
பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
கர்நாடக அரசு புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த கொள்கையை அறிவிப்போம். இது புதிய ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை கண்டுபிடிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள தனிநபர்களையும் அரசு ஊக்குவிக்கும். இந்த கொள்கை தேசிய கல்வி நிறுவனங்களுக்கு பெருமளவில் உதவும்.
குழந்தைகளின் ஆர்வம்
இந்த நேஷனல் கல்லூரி தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துகிறது. இந்த கொள்கை அறிவியல் மற்றும் பரிசோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் ரூ.50 லட்சம் செலவில் அடல் ஆய்வகம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது ஆராய்ச்சிக்கு பெரிய ஊக்கம் அளிப்பதாக அமையும். மாணவா்கள் கேள்வி கேட்க வேண்டும். இது அர்த்தமுள்ள சிந்தனைகளை வளர்க்க உதவும். கேள்வி கேட்கும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது. குழந்தைகளின் ஆர்வம் ஆராய்ச்சியை தூண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.