குவைத் தீ விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
|குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.