< Back
தேசிய செய்திகள்
காட்டுயானை தாக்கி கும்கி படுகாயம்
தேசிய செய்திகள்

காட்டுயானை தாக்கி கும்கி படுகாயம்

தினத்தந்தி
|
14 Jan 2023 12:15 AM IST

துபாரே யானைகள் முகாமில் காட்டுயானை தாக்கி கும்கி படுகாயம் அடைந்தது. தற்போது அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடகு:

துபாரே யானைகள் முகாமில் காட்டுயானை தாக்கி கும்கி படுகாயம் அடைந்தது. தற்போது அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்கி யானைகள்

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா துபாரேவில் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து, இந்த முகாமில் வைத்து கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் அந்த யானைகள் கும்கி யானைகளாக மாற்றப்படுகின்றன.

தற்போது துபாரே யானைகள் முகாமில் 27 காட்டுயானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் கோபி என்ற கும்கி யானையை பாகன்கள் அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் சென்றுவிட்டனர்.

ஆக்ரோஷமாக தாக்கியது

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த ஒரு காட்டுயானை கோபி யானையை கண்டதும் ஆக்ரோஷமாக தாக்கியது. கோபி யானை மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததால் அதனால் அங்கிருந்து தப்பிக்கவோ, தாக்குதலை தடுக்கவோ முடியவில்லை. காட்டுயானை தாக்கியதில் கோபி யானை பலத்த காயம் அடைந்தது. பின்னர் மற்ற கும்கி யானைகள் அங்கு வந்ததால், அந்த காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

நேற்று காலையில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கோபி யானை படுகாயத்துடன் நிலைகுலைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவர்கள் இதுபற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், கால்நடை டாக்டருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை

தகவல் அறிந்த மடிகேரி மண்டல வனத்துறை துணை அதிகாரி பூவய்யா, சோமவார்பேட்டை வனத்துறை அதிகாரி கோபால் மற்றும் உயர் அதிகாரிகள், கால்நடை டாக்டர் உள்ளிட்டோர் வந்து கோபி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கோபி யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் கோபி யானையை தாக்கிய காட்டுயானையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக துபாரே யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வர 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்