< Back
தேசிய செய்திகள்
திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கான சின்னம் வெளியீடு
தேசிய செய்திகள்

திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கான சின்னம் வெளியீடு

தினத்தந்தி
|
8 Oct 2022 3:38 AM IST

கே.ஆர்.பேட்டை அருகே திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கான சின்னத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.

மண்டியா:

கே.ஆர்.பேட்டை அருகே திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கான சின்னத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.

கும்பமேளா

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை அருகே திரிவேணி சங்கமா பகுதியில் தென்னிந்தியாவின் மகா நதிகளான காவிரி, ஹேமாவதி, லட்சுமணதீர்த்தா ஆகிய 3 ஆறுகளும் ஒன்றாக சங்கமிக்கின்றன. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டு கர்நாடக அரசு சார்பில் கும்பமேளா விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அங்கு கும்பமேளா விழா வெகு விமரிசையாக நடத்தப்படாமல் இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் கும்பமேளா விழா கொண்டாடப்பட உள்ளது.

சின்னம் வெளியீடு

அதன்படி இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கும்பமேளா விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசு சார்பிலும், மண்டியா மாவட்ட நிர்வாகம் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்விழாவிற்கான சின்னத்தை நேற்று பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பமேளா விழா கர்நாடக அரசுக்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீரை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி நாராயணகவுடா

இந்த சந்தர்ப்பத்தின்போது மந்திரி நாராயண கவுடா, சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.சி., நாகேந்திரா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அஸ்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்