< Back
தேசிய செய்திகள்
ராமர் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின: களைகட்டிய அயோத்தி நகரம்
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின: களைகட்டிய அயோத்தி நகரம்

தினத்தந்தி
|
17 Jan 2024 7:58 AM IST

அனைத்து ஆகம பூஜைகளுக்கு பின்னர் வருகிற 22-ந் தேதி மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்காக பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணியை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிவைத்தார்.

இந்த கோவில் 225 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமாகவும், கலை நயமிக்கதாகவும் உள்ளது.

வட இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 22-ந் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து இந்து சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

கும்பாபிஷேகத்துக்கு முன் ஐதீக முறையிலான சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் கூறினார்.

ஆகமவிதி பூஜையான 'அனுஷ்தான்' எனப்படும் சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேக நாளான 22-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதில் 11 அர்ச்சகர்கள் கலந்து கொண்டு அனைத்து தெய்வங்களையும் அழைக்கும் வேத மந்திரங்களை ஓதுவார்கள் என்று ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார்.

ராமர் சிலை பிரதிஷ்டையின்போது ஆதிவாசிகள் இருப்பார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை சடங்குகளை கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் மேற்பார்வையில் 121 ஆச்சார்யார்கள் நடத்துகிறார்கள். இதில் காசியை சேர்ந்த லட்சுமிகாந்த் தீட்சித் முதன்மை ஆச்சார்யராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, கும்பாபிஷேகத்துக்கு முந்தைய ஐதீக சடங்குகள் மற்றும் பூஜைகள் நேற்று தொடங்கின.

இன்று (17-ந் தேதி) சிலையின் "பரிசார் பிரவேசம்" நிறைவடையும். நாளை (18-ந் தேதி) 'தீர்த்த பூஜை', 'ஜல யாத்ரா' மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

நாளை மறுநாள் (19-ந் தேதி) மற்றும் (20-ந் தேதி) 'சர்க்கரா திவாஸ்' உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும்.

வருகிற 21-ந் தேதி 'மத்தியதிவாஸ்' மற்றும் 'ஷையாதிவாஸ்' ஆகிய சடங்குகள் நிறைவடையும்.

களைகட்டியது அயோத்தி

அனைத்து ஆகம பூஜைகளுக்கு பின்னர் வருகிற 22-ந் தேதி மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

உலகமே எதிர்பார்க்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்தி நகரம் மட்டுமல்ல, உத்தரபிரதேச மாநிலமே களைகட்டியுள்ளது.

வீதிகளில் உள்ள சுவர்களில் எங்கும், ராமாயண கதைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சவுக்கில், மணல் சிற்பக் கலைஞர் ரூபேஷ் சிங் வடிவமைத்த ராமரின் மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

மேலும் செய்திகள்