கர்நாடகத்தில் குமாரசாமி மீண்டும் முதல்-மந்திரி ஆவது உறுதி; ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் பேட்டி
|கர்நாடகத்தில் குமாரசாமி மீண்டும் முதல்-மந்திரி ஆவது உறுதி என்று ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பெலகாவி:
ஜனதா தளம் (எஸ்) கட்சியில் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எங்கள் கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அடுத்தவரின் பிள்ளைகளை அழைத்து செல்வதே பா.ஜனதாவின் வேலை. அவர்களுக்கு எத்தகைய ஆண்மகன்கள் என்று பாருங்கள். விதை இல்லாமல் இருப்பவர்கள் பா.ஜனதாவினர். மற்றவர்களின் விதைகளை எடுத்து சென்று பயன்படுத்துகிறார்கள். அந்த கட்சியினருக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?.
எத்தனை பேரை வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இருந்து அழைத்து செல்லட்டும். கர்நாடகத்தில் குமாரசாமி மீண்டும் முதல்-மந்திரி ஆவது உறுதி. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை வைத்து கொண்டு பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. ராகுல் காந்தி கர்நாடகத்தில் பாதயாத்திரை நடத்தினார். அதன் மூலம் மக்களுக்கு என்ன கருத்துகளை தெரிவித்தார். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒரு முறை மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். குமாரசாமி முதல்-மந்திரியானால் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். டிக்கெட் வழங்குவதில் லிங்காயத், மராட்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.