எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைக்கவில்லை; ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி பேட்டி
|மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சியை அழைக்கவில்லை என்று ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு:
மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சியை அழைக்கவில்லை என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி கூறினார்.
விவசாயிகள் தற்கொலை
நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அந்த கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. இதில் தனது பெயரில் மதசார்பின்மையை வைத்துள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சி இந்த அணியில் சேரவில்லை. அந்த கட்சி பா.ஜனதா கூட்டணியில் சேர ஆர்வம் காட்டியுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடத்துகிறார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து இதை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இன்னும் 2 மாதங்கள் கூட ஆகவில்லை. இந்த குறுகிய காலத்திலேயே 42 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்த தற்கொலையை தடுக்க இந்த அரசு ஏதாவது ஒரு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை கூறியதா?. அவர்களுக்கு விவசாயிகளின் நலன் முக்கியம் இல்லை. அரசியல் தான் காங்கிரசுக்கு முக்கியம்.
கணக்கில் வைக்கவில்லை
எதிர்க்கட்சிகள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை கணக்கில் வைக்கவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சி மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை அவர்கள் அழைக்கவில்லை. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு எங்களை பா.ஜனதா அழைக்கவில்லை. எங்கள் கட்சியை பலப்படுத்துவது தான் எனக்கு முக்கியம். அந்த பணியை நான் செய்கிறேன்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் முடிவு செய்து காங்கிரசை ஆதரித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.