வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்; குமாரசாமி பரபரப்பு பேச்சு
|வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
ராமநகர்:
வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
குமாரசாமி பேச்சு
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.
உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவது எளிதல்ல
காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த நிதி கிடைக்கும்?.
இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் எப்படி சாலைகள், நீர்ப்பாசனம், உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்சியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்.
அரசியல் மாற்றம் நிகழும்
ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த முறை 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் சமுதாயத்தின் 3 சதவீத வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கைகோர்க்கும் என்று தவறான தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பரப்பினார்கள். பா.ஜனதா தலைவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க திட்டமிட்டனர்.
எங்கள் குடும்பம் இதை விட பல அதிர்ச்சிகளை தாங்கியுள்ளது. கடவுள், மக்களின் அருள் எங்களுக்கு உள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். வரும் காலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.