ஹாசன் தொகுதி விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
|ஹாசன் தொகுதி விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.
ராமநகர்:
ஹாசன் தொகுதி விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாற்றம் இல்லை
ஹாசன் தொகுதி டிக்கெட் விஷயத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் சுமுகமாக முடிவு எடுக்கப்படும். தேவேகவுடா இன்று (நேற்று) டெல்லி சென்றுள்ளார். அவர் பெங்களூரு திரும்பிய பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கட்சியில் டிக்கெட் கிடைக்காவிட்டால் பவானி ரேவண்ணா சுயேச்சையாக போட்டியிடுவதாக வெளியான தகவல் பற்றி நான் கருத்து கூற மாட்டேன். இந்த ஹாசன் தொகுதி டிக்கெட் விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று (நேற்று) கட்சி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றி முடிவு எடுக்கப்படும். இந்த 2-வது பட்டியலில் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள். அடுத்த 4, 5 நாட்களில் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும். எனது சன்னபட்டணா தொகுதியில் பணத்தை எடுத்து வந்து செலவு செய்ய தயாராகி வருகிறார்கள்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
இவர்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் எங்கே இருந்தனர்?. இவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார்கள். எனக்கு இன்னும் ஒரு ஆண்டு ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால், தொகுதியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு இருப்பேன். ஆனால் இந்த நபர்கள் தான் என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கினர்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.