ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால், அறிவியலுக்கு மாறான இட ஒதுக்கீடு ரத்து; குமாரசாமி அறிவிப்பு
|ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால், அறிவியலுக்கு மாறான, பாரபட்சமான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால், அறிவியலுக்கு மாறான, பாரபட்சமான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசு தான் காரணம்
இட ஒதுக்கீடு விஷயத்தில் மாநில மக்களை பா.ஜனதா ஏமாற்றுகிறது. ஆனால் அரசு பணிகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தால் அரசு பணியாளர்கள் நியமனத்தில் நடைபெறும் தவறுகளை சரிசெய்வோம். சிவமொக்காவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதை அரசு சாதாரணமாக கருதாமல் தீவிரமாக எடுத்து கொண்டு யோசிக்க வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற காரணமே அரசு தான். இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசியல் சாசனத்தின் பக்கம் ஜனதா தளம் (எஸ்) நிற்கிறது. அரசியல் சாசன வழிகாட்டுதல்படி இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சமூகங்களை பாழாக்கும், சாதிகள் இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலை யாரும் செய்ய கூடாது. 10 மாவட்டங்களில் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
அரசியல் ஆதாயம்
அவ்வாறு இருந்தும் இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசு திடீரென முடிவு எடுத்து அறிவித்துள்ளது. பொறுப்பு இல்லாமல் ஓட்டுக்காக அவசரகதியில் பா.ஜனதா அரசு முடிவு எடுத்துள்ளது. சமுதாயத்தை உடைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு விஷயத்தை பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் கலாட்டா செய்தால் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளலாம் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.
ஒருவேளை முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி இருந்தால் என்ன ஆகி இருக்கும்?. அப்பாவிகள் உயிரிழந்து இருப்பார்கள். மோதல் ஏற்பட வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நோக்கம். முஸ்லிம்கள் அமைதியாக இருக்க வேண்டும். விளையாட்டு தனமாக எடுத்துள்ள இந்த முடிவை ஜனதா தளம் (எஸ்) ஆதரிக்காது. பணம் பெற்று கொண்டு அரசு வேலையை வழங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டால் என்ன பயன் கிடைக்க போகிறது?.
இடஒதுக்கீடு ரத்து
ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால், அறிவியலுக்கு மாறான, பாரபட்சமான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம். மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வை முன்பே கைது செய்திருக்க வேண்டும். அவரது வீட்டில் ரூ.8 கோடி சிக்கியது. ஆனால் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறையினர் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நாடகம் ஆடுகிறார்கள்.
பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டத்தை கூட்டி பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அந்த கட்சிகள் 80 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.