< Back
தேசிய செய்திகள்
குமாரசாமி அளித்த விருந்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தேசிய செய்திகள்

குமாரசாமி அளித்த விருந்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தினத்தந்தி
|
14 Feb 2023 12:15 AM IST

உப்பள்ளியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி அளித்த விருந்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. வீரபுத்ரப்பா ஆலருவி பங்கேற்றார். அவர் குமாரசாமியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

உப்பள்ளி:

உப்பள்ளியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி அளித்த விருந்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. வீரபுத்ரப்பா ஆலருவி பங்கேற்றார். அவர் குமாரசாமியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சித்தரோடா மடம் அமைந்துள்ளது. நேற்று அந்த மடத்திற்கு முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி வந்தார். அவர் மடத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஓட்டல் ஒன்றில் உப்பள்ளியில் உள்ள பா.ஜனதா மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தியாளர்களை சந்தித்தார். மேலும் அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்தார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தங்கள் கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள பலர் இந்த விருந்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்க்க திட்டமிட்டு குமாரசாமி விருந்து அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமாரசாமி அழைப்பு

இந்த விருந்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரபுத்ரப்பா ஆலருவி கலந்து கொண்டார். அவரை விருந்தில் பங்கேற்று இருந்த பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். சிலர், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த விருந்தில் உங்களுக்கு என்ன வேலை என்று நேரடியாகவே கேட்டனர். அதற்கு வீரபுத்ரப்பா ஆலருவி, நான் குமாரசாமியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். என்னை இந்த விருந்தில் பங்கேற்கும்படி குமாரசாமி அழைத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம். எனக்கு பா.ஜனதவில் டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைய வந்திருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைய போகிறேன் என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

பஞ்சரத்னா யாத்திரை

பின்னர் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் இந்த விருந்து நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தெரிவித்தனர். பின்னர் குமாரசாமி, ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நடத்தப்பட்ட பஞ்சரத்னா யாத்திரையில் பங்கேற்றார்.

அந்த யாத்திரை உப்பள்ளி டவுன் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், மாற்று கட்சிகளில் இருந்து ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இணைந்தவர்கள் என எராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்