ஜனதா தளம் (எஸ்), பா.ஜனதாவின் 'பி அணியா?'; குமாரசாமி ஆவேசம்
|கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பி அணி ஜனதா தளம் (எஸ்) கட்சி என்ற குற்றச்சாட்டுக்கு குமாரசாமி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பி அணி ஜனதா தளம் (எஸ்) கட்சி என்ற குற்றச்சாட்டுக்கு குமாரசாமி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நகைப்புக்குரியது
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பழைய பாட்டிலில் புதிய ஒயினை நிரப்பி தனது நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் கட்சிக்கு எதிராக அவர் குறை கூறியுள்ளார். அதாவது பா.ஜனதாவின் 'பி அணி' என்று ஜனதா தளம் (எஸ்) கட்சியை அவர் விமர்சித்துள்ளார். சித்தராமையாவின் கருத்தை காப்பி அடித்து அவர் இதை கூறியுள்ளார். இது நகைப்புக்குரியதாக உள்ளது.
இந்த விமர்சனத்தை முன்வைப்பதற்கு முன்பு, எங்கள் கட்சியின் உண்மை நிலைகளை அவர் தெரிந்திருக்க வேண்டும். பா.ஜனதா ஏஜெண்டின் அருகில் உட்கார்ந்து கொண்டு எங்கள் கட்சியை அவர் பா.ஜனதாவின் 'பி அணி' என்று குறை கூறியதை ஏற்க முடியவில்லை. குறைந்தபட்சம் டி.கே.சிவக்குமாரிடம் ஆவது கேட்டு இருக்கலாம். கடந்த 2008-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் ஆக வேண்டும் என்பதற்காக அந்த பதவியில் இருந்த கார்கேவை கீழே இறக்க எடியூரப்பாவுடன் கைகோர்த்து சித்தராமையா செயல்பட்டார்.
பதில் கிடைக்கவில்லை
இந்த சித்தராமையாவின் சதி அவருக்கு தெரியாமல் இருக்கலாம். இதுகுறித்து கார்கேவிடமே அவர் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் 8 காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க கோடிக்கணக்கான பணத்தை யார் பெற்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பணத்தை கொடுத்தது யார்?. இந்த கேள்வியை நான் பல முறை கேட்டுள்ளேன். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.கடந்த 2018-ம் ஆண்டு எனது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன் பிறகு அரசியல் சதியை தொடங்கியவர்கள், எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டது யார்?. அதனால் எங்கள் கட்சியை பா.ஜனதாவின் பி அணி என்று சொல்வதை ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிறுத்த வேண்டும்.
நீங்களே பொறுப்பு
இல்லாவிட்டால் வரும் நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. கர்நாடகத்தில் மதசார்பற்ற சக்திகளின் பலத்தை பலவீனப்படுத்துவதில் நீங்களும் பொறுப்பாகி விடுவீர்கள். பா.ஜனதாவின் பி அணி யார் என்பது குறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்த விவாதம் விதான சவுதா முன்பு நடைபெறட்டும். இதற்கு தேதி, நேரத்தை நான் குறிக்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.