மேல்-சபை உறுப்பினர்களுக்கும் தலா ரூ.50 கோடி ஒதுக்க வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்
|ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர்களுக்கும் தலா ரூ.50 கோடி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பா.ஜனதா மேல்-சபை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் கேட்டு கொண்டதால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். அந்த நிதிமூலமாக சன்னப்பட்டணாவில் சி.பி.யோகேஷ்வரே பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார். இதுபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர்களுக்கும் தலா ரூ.50 கோடியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒதுக்க வேண்டும். இதற்காக எங்கள் கட்சியின் மேல்-சபை உறுப்பினர்களுடன் முதல்-மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதிஒதுக்குவதில் அரசு பாரபட்சமாக செயல்பட கூடாது. சன்னப்பட்டணாவில் நடந்த பிரச்சினைக்கு யார் காரணம் என்று தெரியும். எந்த ஒரு வளர்ச்சி பணியாக இருந்தாலும், விதிமுறைகள் படி நடக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால், அதற்கு எதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்குகிறார்கள். அழைப்பிதழில் எனது பெயா் விடுபட்டதில் தவறு நடந்திருப்பதாக ராமநகர் மாவட்ட கலெக்டரே தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை அதிகாரிகளே தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.