< Back
தேசிய செய்திகள்
கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை; குமாரசாமி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை; குமாரசாமி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உயர்மட்ட விசாரணை

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நந்தீஸ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பணி இடமாறுதல் தொடர்பாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது வட இந்திய அதிகாரிகளால் தொல்லை மற்றும் மாநில அரசால் நடைபெற்ற கொலை ஆகும். இதை மாரடைப்பால் ஏற்பட்ட இறப்பு என்று கூற முடியாது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

பணம் பெற்று கொண்டு பணி இடமாறுதல் வழங்குவதால் நேர்மையாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கே.ஆர்.புரம் போலீஸ் நிலைய எல்லை பகுதியில் ஒரு 'பப்' இருக்கிறது. அது அதிகாலை வரை திறந்துள்ளது. அதற்கு இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று கூறி அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர். அந்த பப் எவ்வளவு நேரம் திறக்கப்பட்டு இருந்தது, அங்கு எந்தெந்த அரசியல்வாதிகள் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற வேண்டும்.

பணி நியமனம்

பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சட்டவிரோதமாக கேசினோ, மட்கா சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பணி நியமனம் மற்றும் பணி இடமாறுதலுக்கு இந்த அரசு கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கிறது.

இறந்த அந்த இன்ஸ்பெக்டர் எம்.எல்.சி. ஒருவரின் உறவினர் ஆவார். மக்கள் பிரதிநிதியின் உறவினருக்கே இந்த நிலை ஏற்பட்டால், எந்த செல்வாக்கும் இல்லாத அதிகாரியை நினைத்து பாருங்கள். கர்நாடகத்தில் பணியாற்றும் வேறு மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் பா.ஜனதா மேலிடத்தின் ஆதரவுடன் இங்கு தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்