< Back
தேசிய செய்திகள்
காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க சிமெண்டு தடுப்பு சுவர் அமைப்பு
தேசிய செய்திகள்

காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க சிமெண்டு தடுப்பு சுவர் அமைப்பு

தினத்தந்தி
|
7 April 2023 1:55 AM IST

சோமவார்பேட்டையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க சிமெண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

குடகு:

சோமவார்பேட்டையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க சிமெண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

காட்டுயானை அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தை அருகே ஹரிகரா, கவுடள்ளி, கூகூர், சிக்கரா ஆகிய கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியையொட்டி சிமெண்டு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்தனர். இதற்காக மாநில அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கியது.

தடுப்பு சுவர்

அந்த நிதியை கொண்டு கடந்த மாதம் சிமெண்டு தடுப்பு சுவர் கட்டும்பணி தொடங்கியது. ஹரிகரா, கவுடள்ளி கிராமத்தையொட்டி இந்த சிமெண்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டது. சுமார் 2.25 மீட்டர் உயரத்துடன் 75 மீட்டர் தூரம் வரை சிமெண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட பின்னர் காட்டுயானைகள் நடமாட்டம் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இதேபோல கூகூர், சிக்கரா கிராமங்களில் தடுப்பு சுவர் அமைக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கும் சிமெண்டு தடுப்பு சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்