< Back
தேசிய செய்திகள்
16,696 காலி பணியிடங்களை நிரப்பி கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்; கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

16,696 காலி பணியிடங்களை நிரப்பி கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்; கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

பெண்கள் இலவச பயண திட்டத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே காலியாக உள்ள 16,696 பணியிடங்களை நிரப்பி, கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:

பெண்கள் இலவச பயண திட்டத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே காலியாக உள்ள 16,696 பணியிடங்களை நிரப்பி, கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசுக்கு கடிதம்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு, கடந்த 11-ந்தேதி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பஸ் கண்டக்டர்கள் கூட்டநெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

இ்ந்த நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எச்.வி.அனந்த சுப்பாராவ் கர்நாடக அரசுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

பெண்கள் இலவச பயண திட்டத்தால், அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவராஜ் அர்ஸ் முதல்-மந்திரியாக இருந்த போது ஒப்பந்த வாகனங்கள் ஒழிப்பு சட்டம்-1976 கொண்டுவரப்பட்டது. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி. மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. மேலும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்பட்டது.

16,696 காலி பணியிடங்கள்

அதுபோல் தற்போதும் தனியார் பஸ்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். மேலும் போக்குவரத்து கழகத்தில் 16 ஆயிரத்து 696 பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

சீனிவாசமூர்த்தியின் தனிநபர் குழு மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என கண்டறிந்து அறிக்கை அளித்துள்ளது. அந்த கிராமங்களுக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்