இந்திய பாதுகாப்பு செயலாளராக கிரிதர் அரமானே இன்று பதவியேற்பு
|இந்திய பாதுகாப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிதர் அரமானே இன்று பதவியேற்று கொண்டார்.
புதுடெல்லி,
இந்திய பாதுகாப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிதர் அரமானே இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்கும் முன், தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து, மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் வீரவணக்கமும் செலுத்தினார். ஐதராபாத்தில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பி.டெக் படிப்பும், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படிப்பும் படித்துள்ளார்.
வாரங்கல்லில் உள்ள காகத்திய பல்கலை கழகத்தில் எம்.ஏ. (பொருளாதாரம்) படிப்பும் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 32 வருட கால அனுபவத்தில் அவர், மத்திய மற்றும் ஆந்திர பிரதேச அரசில் பல முக்கிய துறைகளில் பதவி வகித்துள்ளார்.
அவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு உள்ளார்.
அதற்கு முன்பு அவர் மத்திய செயலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்துள்ளார். இதுதவிர, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திலும், காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி கழகத்தில் ஆய்வு பணிக்கான மேலாண் இயக்குனராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.
ஆந்திர பிரதேச அரசில், நகர்ப்புற வளர்ச்சி துறையின் தலைமை செயலாளர், மாநில நிதி கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆகிய துறைகளிலும் அவர் பதவி வகித்துள்ளார்.