கிருஷ்ணகிரி தொழிலாளி அடித்து கொலை
|பெங்களூருவில் தமிழ்நாடு கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்
தமிழ்நாடு கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர், கட்டிட தொழிலாளி ஆவார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்ட நாகமங்களா அருகே பாலாஜி லே-அவுட்டில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் வேலை பார்த்து வந்தனர்.
அந்த கட்டிடத்தின் அருகேயே சிறிய குடிசை அமைத்து 4 பேரும் தங்கி இருந்தார்கள். வழக்கம் போல் 4 பேரும் சாப்பிட்டு விட்டு உரங்கினர். அப்போது ரஜனிஷ் என்பவரின் செல்போன் ஹெட்போனை கார்த்திக் எடுத்து பயன்படுத்தியதாக தெரிகிறது. அதனை தன்னிடம் கொடுக்கும்படி ரஜனிஷ் கேட்டும், கார்த்திக் தரமறுத்துள்ளார்.
அடித்துக் கொலை
இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காாத்திக்கை ரஜனிஷ் கண்மூடித்தனமாக அடித்து தாக்கியுள்ளார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் கார்த்திக் படுத்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலையில் நீண்ட நேரமாகியும் கார்த்திக் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஹெட்போனை எடுத்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கார்த்திக்கை, ரஜனிஷ் அடித்து தாக்கியதால், அவர் உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜனிசை வலைவீசி தேடிவருகிறார்கள்.