< Back
தேசிய செய்திகள்
தார்வார் அருகே கோர விபத்து:  மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலி
மாவட்ட செய்திகள்
தேசிய செய்திகள்

தார்வார் அருகே கோர விபத்து: மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலி

தினத்தந்தி
|
21 May 2022 10:39 PM IST

தார்வார் அருகே சாலையோர மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு வந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

உப்பள்ளி:

திருமண வரவேற்பு

தார்வார்(மாவட்டம்) தாலுகா பெனகட்டி கிராஸ் நிகதி கிராமத்தில் வசித்து வருபவர் கல்லப்பா தாசனகொப்பா. விவசாயி. இவரது மகன் மஞ்சுநாத். இவருக்கு மனசூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களுக்கு நேற்று ரேவனசித்தேஸ்வரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு அங்கு திருமண வரவேற்பும், நிச்சயதார்த்தமும் நடந்தது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு முடிந்ததும் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் தங்களது வீடுகளுக்கு வந்தனர்.

ஜீப்பில் புறப்பட்டனர்

அதுபோல் மணமகளின் குடும்பத்தினர் நீலவ்வா(வயது 60), ஹரீஷ்(14), ஷில்பா(34) ஆகியோர் உள்பட 21 பேர் ஒரு ஜீப்பில் புறப்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவு மனசூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தார்வார் தாலுகா பாடா கிராமம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஜீப் முற்றிலும் சேதம் அடைந்து அப்பளம்போல் நொறுங்கியது.

7 பேர் பலி

ஜீப்பில் பயணித்த மணமகளின் குடும்பத்தினர் நீலவ்வா மற்றும் குடும்பத்தினர் ஷில்பா, ஹரீஷ், உறவினர்கள் அனன்யா(14), மதுஸ்ரீ(20), மகேஸ்வரய்யா(11), ஜம்புலிங்கய்யா(35) ஆகிய 7 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 14 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உடனடியாக இதுபற்றி தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

9 ஆக உயர்வு

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஜீப் மீட்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாத படி ஜீப் உருக்குலைந்து இருந்ததால், காயம் அடைந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டனர். அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியானார்கள். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

பின்னர் போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் தொடர் கனமழையால் சாலை ஈரமாக இருந்துள்ளது. இந்த நிலையில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜீப்பில் வந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் வேகமாக மோதியது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 9 பேர் பலியானதன் காரணமாக நேற்று திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணமகளும், மணமகனும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களது திருமணம் நின்று போனதாக கூறப்படுகிறது.

ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட உடல்கள்

இந்த கோர விபத்தில் பலியான உறவினர்கள் நீலவ்வா, ஹரீஷ், ஷில்பா ஆகியோரின் உடல்களைப் பார்த்து மணமகள் கதறி அழுதார். அவர் அழுது புரண்டது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்த குடும்பத்தினர் உடனடியாக இறுதி அஞ்சலி செலுத்தி ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்து

தார்வார் அருகே சாலையோர மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு வந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.விபத்தில் சிக்கிய நீலவ்வா உள்பட 21 பேரும் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கிராமத்தில் இருந்து திருமண மண்டபம் 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்