காங்கிரஸ் தலைவர் பதவியை நிர்வகிக்க சிரமமா?; டி.கே.சிவக்குமார் விளக்கம்
|காங்கிரஸ் தலைவர் பதவியை நிர்வகிக்க சிரமமா? என்பதற்கு டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
துமகூருவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பங்கேற்று பேசுகையில், நான் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக 8 ஆண்டுகள் இருந்தேன். நான் தலைவராக இருந்த போது 2 சட்டசபை தேர்தலை சந்தித்தேன். 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவது, தேர்வு செய்வது மிகவும் சிரமம். தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமார், அந்த பதவியை நிர்வகிக்க மிகுந்த சிரமப்படுகிறார். அவருடன் தலைவர்கள் இருப்பதாக கூறி இருக்கிறேன், என்றார். காங்கிரஸ் தலைவர் பதவியை நிர்வகிக்க சிரமப்படுவதாக பரமேஸ்வர் கூறிய கருத்து குறித்து பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ஒரு நாளில் 24 மணிநேரம் மட்டுமே இருக்கிறது. இன்னும் அதிக நேரம் இருந்தால், அதனை கூட பயன்படுத்தி கொள்ள முடியும். ஏனெனில் தினமும் நள்ளிரவு 2 மணிவரை தூங்காமல் இருந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். பா.ஜனதாவினர் எப்போதும் இரட்டை என்ஜின் அரசு என்றும், அரசு அதிகாரிகளின் பலத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களை எதிர் கொள்ள வேண்டியது இருக்கிறது. இதுபற்றியெல்லாம் தெரிந்தும், எனது உடல்நலம் மற்றும் என் மீதான அனுதாபத்தால் பரமேஸ்வர், அதுபோன்று கருத்துகளை கூறி இருக்கலாம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.