ஜி20 மாநாட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கோனார்க் சக்கரம்.. வியந்து பார்த்த தலைவர்கள்..!
|கோனார்க் கோவில் சக்கரத்தின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி விளக்கினார்.
டெல்லியில் இன்று ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த தலைவர்களை பிரதமர் மோடி நேரடியாக வரவேற்றார். அவர் வரவேற்ற இடத்தின் பின்னணியில், ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரத்தின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பக்கத்தில் ஜி20 லோகோவும், மறுபக்கத்தில் மாநாட்டின் கருப்பொருளும் (வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்) அச்சிடப்பட்டிருந்தது. இதை ஜி20 தலைவர்கள் வியந்து பார்த்தனர். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோனார்க் சக்கரத்தின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி விளக்கினார்.
கோனார்க் கோவிலின் சக்கரம் 13 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் நரசிம்மதேவரின் ஆட்சியில் கட்டப்பட்டது. 24 (ஆரங்கள்) ஸ்போக்ஸ்கள் கொண்ட இந்த சக்கரம், இந்தியாவின் பண்டைய ஞானம், மேம்பட்ட நாகரிகம் மற்றும் கட்டிடக்கலை சிறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டின் தேசியக்கொடியான மூவர்ணக் கொடியிலும் இந்த சக்கரம் உள்ளது.
சக்கரத்தின் சுழலும் இயக்கமானது காலச்சக்கரம், முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான மாற்றத்தை குறிக்கிறது. ஜனநாயக சக்கரத்தின் சக்திவாய்ந்த சின்னமாகவும் இது விளங்குகிறது.