< Back
தேசிய செய்திகள்
இது உங்கள் சொத்து.. - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி
தேசிய செய்திகள்

"இது உங்கள் சொத்து.." - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி

தினத்தந்தி
|
20 July 2024 10:45 PM GMT

சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்சில் ஏறிய போதை ஆசாமி, அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ் (வயது23), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்தார்.

பஸ்சுக்கு காத்திருந்த அவரிடம் அங்கு இருந்தவர்கள், 'இரவு நேரத்தில் தென்மலைக்கு பஸ் சேவை கிடையாது. காலையில் தான் செல்ல முடியும்' என்றனர். இதனால் என்ன செய்வது என்று யோசித்த பினீஷ் சுற்றும் முற்றும் பார்த்தார்.

இந்த பஸ் நிலையத்தின் அருகே போக்குவரத்து பணிமனை உள்ளது. அங்கு இடம் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் பஸ்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி பஸ் நிலையத்தின் அருகே ஒரு அரசு பஸ் நிற்பதை பினீஸ் பார்த்தார். உடனே அவர் அந்த பஸ்சில் ஏறி அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார். புறப்பட்ட அவசரத்தில் அவர் முகப்பு விளக்கை எரிய வைக்க மறந்து விட்டார்.

சிறிது தூரம் சென்ற போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகப்பு விளக்கு இல்லாமல் ஒரு அரசு பஸ் வருவதை பார்த்து சந்தேகமடைந்து பஸ்சை நிறுத்துமாறு கூறினர். போலீசாரை கண்டதும் பினீஸ் பஸ்சை நிறுத்தி விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அரசு பஸ்சை கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து பினீசை போலீசார் கைது செய்து கொல்லம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்