< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்:  திரிணாமுல் காங்கிரஸ்
தேசிய செய்திகள்

கொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்

தினத்தந்தி
|
12 Sept 2024 8:15 AM IST

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒரு நபர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் கூறும்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். டாக்டர்கள் போராட்டம் பற்றி நாங்கள் எதுவும் விமர்சிக்க போவதில்லை. அவர்கள் பணிக்கு திரும்ப காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

முதல்-மந்திரியும் அவர்களுக்காக காத்திருந்தார். நீதிக்கான கோரிக்கைக்கு நாங்களும் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அதனால், சி.பி.ஐ. விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒரு நபர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர், குற்றம் நடந்த விபரங்களை போலீசாரிடம் ஒப்பு கொண்டுள்ளார். எனினும், பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு உள்ளது என பெண் டாக்டரின் தந்தை தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்கள் பேரணியாக நேற்று சென்று எதிர்ப்பை பதிவு செய்ததுடன், பலாத்காரம் மற்றும் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், இந்த சம்பவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக இருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவடைந்து உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்