< Back
தேசிய செய்திகள்
பயிற்சி பெண் டாக்டர் கொலை: பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்
தேசிய செய்திகள்

பயிற்சி பெண் டாக்டர் கொலை: பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்

தினத்தந்தி
|
10 Aug 2024 1:12 PM IST

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி டாக்டரை சடலத்தை நேற்று சக மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதேசமயம் சடலத்தில் காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரைநிர்வாண நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை 2ஆம் ஆண்டு மாணவி என்றும் இவர் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் இரவு பணியில் இருந்திருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவருடன் நேற்று இரவு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சூழலில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், உண்மையை மறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பெண் டாக்டரின் தந்தை குற்றம் சாட்டி இருந்தார். இதனைத்தொடர்ந்து அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெற்றோரை அழைத்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த பிரேத பரிசோதனையில் இறந்து கிடந்த பெண் டாக்டர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கொடூர சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்