< Back
தேசிய செய்திகள்
கார் மற்றும் வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கில் 4 பேர் கைது
தேசிய செய்திகள்

கார் மற்றும் வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கில் 4 பேர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2022 8:08 AM GMT

கார் மற்றும் வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கில் 4 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான சைலேஷ் பாண்டே மற்றும் அரவிந்த் பாண்டே இருவரும் பெரும் தொகையிலான பரிவர்த்தனைகள் செய்தது குறித்து வங்கிகள் கொல்கத்தா போலீசாருக்கு தகவல் கொடுத்தன. இந்த தகவலின் அடிப்படையில் சைலேஷ் பாண்டே மற்றும் அரவிந்த் பாண்டேவுக்குச் சொந்தமான ஷிப்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அவர்களது குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் அவர்களது குடியிருப்பில் இருந்த பெட்டி, படுக்கைகளில் அதிக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் ரூ.8 கோடி மீட்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொல்கத்தா போலீசாரின் துப்பறியும் துறையின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. அவர்கள் இருக்கும் இடம் தெரியாததால் கொல்கத்தா போலீசார் அவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர்.

இந்த நிலையில் சைலேஷ் பாண்டே, அரவிந்த் பாண்டே, ரோஹித் பாண்டே மற்றும் அவர்களது கூட்டாளி ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஒரு சிறிய பகுதி மக்கள் பெரும் சொத்துக்களையும், முறைகேடான பணத்தையும் குவித்துள்ளனர் என்று மாநில அரசை கடுமையாக சாடினார்.

இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி சாந்தனு சென், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது மாநில போலீசார் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வரும் பாதையில் இருப்பதை காட்டுகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்