கோலார் நகரசபை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
|பொதுமக்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கோலார் நகரசபை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
கோலார் தங்கவயல்
பாலிதீன் பைகள்
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
மேலும் வீடுகளில் இருந்து நகரசபை தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளே நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதை சரி செய்யும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கோலார் நகரசபை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபடியாக நேற்று கோலார் நகரசபை அலுவலகத்தில் இருந்து நகரசபை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
நகரசபை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக சுராஜ்மல் சர்க்கிள், காந்தி சர்க்கிள் வரை சென்றது.
ஊர்வலத்தின் போது பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் தங்களின் வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு தூய்மை பணியாளர்கள் சென்றனர்.
முடிவில் காந்தி சிலை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியும் நகரசபை ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் கோஷங்கள் எழுப்பினர்.