< Back
தேசிய செய்திகள்
கொடசாத்ரி மலைக்கு சுற்றுலா செல்ல மீண்டும் அனுமதி
தேசிய செய்திகள்

கொடசாத்ரி மலைக்கு சுற்றுலா செல்ல மீண்டும் அனுமதி

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

சிவமொக்கா மாவட்டம் கொடசாத்ரி மலைக்கு சுற்றுலா செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதில் சில கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் கொடசாத்ரி மலைக்கு சுற்றுலா செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதில் சில கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

தடை

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையில் கொடசாத்ரி சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்தநிலையில் கொடசாத்ரி மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி நேற்று முன்தினம் முதல் அனுமதி அளித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள அரசனகுந்தி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியின் அருகே சென்று சாகச வீடியோக்கள் மற்றும் செல்பி எடுத்தும் வந்தனர்.

அப்போது சரத்குமார் என்ற வாலிபர் வீடியோ எடுக்க சென்று தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தாா். அதன்பிறகு அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் பேராடி மீட்டனர். இதனால் கொடசாத்ரி மலைப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை வித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகள்

சுற்றுலா பயணிகள், கொடசாத்ரி மலைப்பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் அங்கு ஜீப்பில் செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் வழியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்பாமலும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாதவாறும் செல்ல வேண்டும் எனவும், போதைப்பொருட்கள் கொண்டு வர கூடாது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் சட்டரீதியாக எந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதற்கு தாங்களே பொறுப்பு என்று கடிதம் கொண்டுவர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்திள்ளனர்.

மேலும் செய்திகள்