கேரள குண்டு வெடிப்பு வழக்கு: டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
|நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் வருமான ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதாக போலீசார் அனுமதி கோரினர்.
கொச்சி,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், களமச்சேரியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி 'யெகோவாவின் சாட்சியங்கள்' என்ற கிறிஸ்துவ மதப் பிரிவின் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். 50 க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் டொமினிக் மார்ட்டின் என்பவர் காவல்துறையில் சரணடைந்தார்
இதையடுத்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என கோர்ட்டில் போலீசார் அனுமதி கோரினர். மேலும், ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள மார்ட்டினை குறிப்பிட்ட சில இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அனுமதி கோரினர். அதையடுத்து மார்ட்டினை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கொச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.