திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
|திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்திராநகர்:
பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். 23 வயதான அவருக்கு திருமணமாகி விட்டது. இதற்கிடையில், இளம்பெண்ணுக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவருடன், அந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட ஆட்டோ டிரைவர், இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஆட்டோ டிரைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்ய ஆட்டோ டிரைவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு திருமணமாகி விட்டதால், ஆட்டோ டிரைவரை 2-வது திருமணம் செய்ய இளம்பெண் மறுத்து விட்டார்.
அதே நேரத்தில் ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும் அவர் நிறுத்திவிட்டார். ஆனாலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில், இளம்பெண்ணுடன் பேச வேண்டும் என்று அழைத்து, அவரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதில், பலத்தகாயம் அடைந்த அந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவரை தேடிவருகிறார்கள்.