< Back
தேசிய செய்திகள்
200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதில் புதிய கட்டுப்பாடு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
தேசிய செய்திகள்

200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதில் புதிய கட்டுப்பாடு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

தினத்தந்தி
|
3 Jun 2023 6:45 PM GMT

200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் முழு கட்டணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் முழு கட்டணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

200 யூனிட் இலவச மின்சாரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். அதே நேரத்தில் வழக்கமாக 100 யூனிட் பயன்படுத்துவோர், கூடுதலாக 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், முழுமையாக 200 யூனிட் பயன்படுத்தி கொள்ள முடியாது எனறும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், 200 யூனிட்டை கழித்து விட்டு மீதி இருக்கும் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்கள் பரவியது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முழுமையான கட்டணத்தையும்...

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் 200 யூனிட்டுக்கு மேல் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டுப்பாட்டின்படி இலவச மின்சாரம் பெற வேண்டும் என்றால், 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் சராசரியாக 100 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துவோர், கூடுதலாக 10 யூனிட் பயன்படுத்தி கொள்ளலாம். சராசரியாக 100 யூனிட் பயன்படுத்துவோர், 115 யூனிட் பயன்படுத்தினால், 110 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்த்து 5 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்தியே தீர வேண்டும். 200 யூனிட் இலவச மின்சாரத்தை மக்கள் தவறாக பயன்படுத்தி கொள்ள கூடாது, மின்சாரத்தை வீணடிக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்