< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை கற்பழிக்க முடியாததால் கொலை:மனைவிக்கு தெரியாமல் உடலை மறைத்தது எப்படி?
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கற்பழிக்க முடியாததால் கொலை:மனைவிக்கு தெரியாமல் உடலை மறைத்தது எப்படி?

தினத்தந்தி
|
14 Aug 2023 3:00 AM IST

பெங்களூருவில் இளம்பெண்ணை கற்பழிக்க முடியாததால் கொலை செய்ததுடன், மனைவிக்கு தெரியாமல் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்தது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் காவலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூரு:-

காவலாளி கைது

பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கலபுரகியை சேர்ந்த 21 வயது இளம்பெண் கடந்த 11-ந் தேதி கொலை செய்யப்பட்டு இருந்தார். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்த இளம்பெண், சகோதரியுடன் தங்கி இருந்தார். அந்த இளம்பெண்ணை கொலை செய்ததாக பக்கத்து வீட்டில் வசிக்கும் காவலாளியான கிருஷ்ணாவை மகாதேவபுரா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தார்கள்.

அப்போது இளம்பெண்ணை அவர் கற்பழிக்க முயன்றதும், அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. அதே நேரத்தில் இளம்பெண்ணின் உடலை தனது மனைவிக்கு தெரியாமல் மறைத்தது எப்படி? என்பது பற்றியும் காவலாளி கிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மனைவி வேலைக்கு சென்றார்

அதாவது இளம்பெண்ணும், கிருஷ்ணாவின் மனைவியும் ஒரே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தான் வேலை பார்த்து வந்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசித்ததால் இளம்பெண்ணை கிருஷ்ணா விரும்பியுள்ளார். அவரை அடையவும் திட்டமிட்டுள்ளார். கடந்த 10-ந் தேதி விடுமுறை என்பதால் இளம்பெண் வீட்டில் இருந்ததுடன், இரவு 8 மணியளவில் வீட்டு முன்பாக நின்றிருக்கிறார்.

அன்றைய தினம் கிருஷ்ணாவின் மனைவி பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணா, அங்கு நின்ற இளம்பெண்ணிடம் நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

டிரம்முக்குள் உடல் மறைப்பு

பின்னர் கதவை பூட்டிவிட்டு இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கழுத்தை நெரித்து கிருஷ்ணா கொலை செய்திருக்கிறார். தனது மனைவி வேலை முடிந்து வருவதற்குள் இளம்பெண்ணின் உடலை மறைக்க கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். இதற்காக போர்வையில் இளம்பெண்ணின் உடலை சுற்றி வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் கிருஷ்ணா மறைத்து வைத்துள்ளார். வேலை முடிந்து மனைவி வீட்டுக்கு திரும்பியதும் அயர்ந்து தூங்கியுள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் எழுந்த கிருஷ்ணா, டிரம்முக்குள் இருந்த இளம்பெண்ணின் உடலை வெளியே எடுத்து, இளம்பெண்ணின் வீட்டின் அருகேயே வீசி இருந்தார். அதிகாலை 5 மணியளவில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தெரிந்ததும், அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்துள்ளனர். ஆனால் கிருஷ்ணா மட்டும் வீட்டுக்கதவை திறக்காமல் உள்ளே இருந்ததுடன், அதுபற்றி போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லி போலீசாரிடம் சிக்கி இருந்தார். விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்