வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகள் திருட்டு:தமிழகத்தில் கேரள போலீசார் விசாரணை
|வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகளை எடுத்து கடத்தி விற்ற வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழகத்தில் கேரள தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சி,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(வயது 42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி, அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவர்களது சிறுநீரகங்கள், கல்லீரலை எடுத்து கடத்தி விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது.
அதன் பேரில் திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சபித் நாசரை கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எடப்பள்ளி பகுதியை சேர்ந்த சஜித் சாபு (30) என்பவருக்கும் உடல் உறுப்புகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், கும்பலின் வரவு, செலவு கணக்குகளை கவனித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து சபித் நாசரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அங்கமாலி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பின்னர் ரகசிய இடத்தில் வைத்து சபித் நாசரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழை மக்களை குறி வைத்து அதிக பணம் தருவதாக கூறி, அவர்களை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.அங்கிருந்து விமானம் மூலம் ஈரானுக்கு அழைத்து சென்று, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர்களது உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து கடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். உறுப்பை கொடுக்கும் நபர் ஒருவருக்கு ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரையும், ஆஸ்பத்திரி சார்பில் ரூ.50 லட்சமும் கும்பல் பெற்று உள்ளது.
கேரளாவை சேர்ந்த மது என்பவர் ஈரானில் தங்கி, உடல் உறுப்புகளை எடுத்து கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்படும் நபர்கள் 20 நாட்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு, அந்த நாட்களுக்குள் அவர்களிடம் இருந்து அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கல்லீரலை எடுத்து கடத்தலை கும்பல் அரங்கேற்றி வருகிறது. பின்னர் அவர்களை மது இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
குறிப்பாக பெண்களை ஏமாற்றி ஈரானுக்கு அனுப்பி உள்ளனர். 2018-ம் ஆண்டு சபித் நாசர் கடன் தொல்லையில் இருந்தார். பின்னர் தனது உறுப்பை விற்பனை செய்வதற்காக கும்பலுடன் ஈரான் சென்று உள்ளார். அப்போது முக்கிய புள்ளியான மதுவுடன் தொடர்பு ஏற்பட்டு ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். ஏழ்மையில் உள்ளவர்களை ஆசைவார்த்தை கூறி அனுப்பி வைத்து லட்சக்கணக்கான ரூபாய் பெற்று உள்ளார். 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக சபித் நாசர் உடல் உறுப்புகள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
ஈரானில் உள்ள மதுவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் எர்ணாகுளம் ஊரக போலீஸ் சூப்பிரண்டு வைபவ் சாக்சனா தலைமையில் 10 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தமிழ்நாட்டில் கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உறுப்புகளை கொடுத்தவர்கள் அல்லது இழந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பெங்களூரு, ஐதராபாத்தில் விசாரணை நடத்த கேரள போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.