< Back
தேசிய செய்திகள்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல்: வாலிபர் வெறிச்செயல்
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல்: வாலிபர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
11 March 2024 4:42 AM IST

போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகள் விஜயலட்சுமி. இவர், கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அந்த மாணவியை விஷ்ணு என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் மாணவி படிக்கும் கல்லூரி மற்றும் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்றும் தன்னை காதலிக்கும்படி விஷ்ணு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் விஷ்ணுவின் காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார். இதுபற்றி தனது தந்தையிடமும் மாணவி தெரிவித்தார். இதையடுத்து, விஷ்ணுவை பிடித்து மாணவி விஜயலட்சுமியின் தந்தை கண்டித்துள்ளார். இது விஷ்ணுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நேற்று காலையில் வீட்டின் அருகே நடந்து சென்ற விஜயலட்சுமியை, விஷ்ணு தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது தொடர்பான புகாரையடுத்து, கடத்தப்பட்ட மாணவியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதுபற்றி விஷ்ணு மற்றும் அவரது நண்பர்களுக்கு தெரியவந்தது. இதனால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்த விஷ்ணு, ஹாவேரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாணவியை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட மாணவியை விஷ்ணு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்