< Back
தேசிய செய்திகள்
டெல்லி பெண்ணின் கற்பழிப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்; நிலத்தகராறில் 5 பேரை சிக்க வைக்க நாடகம் அரங்கேற்றியது அம்பலம்
தேசிய செய்திகள்

டெல்லி பெண்ணின் கற்பழிப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்; நிலத்தகராறில் 5 பேரை சிக்க வைக்க நாடகம் அரங்கேற்றியது அம்பலம்

தினத்தந்தி
|
22 Oct 2022 1:30 AM IST

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி பெண் அளித்த கூட்டு கற்பழிப்பு புகாரில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

சாக்குமூட்டையில் கட்டி வீசினர்

டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டாக கற்பழித்ததாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். அவர் சாக்குமூட்டை ஒன்றில் கட்டி வீசப்பட்டு இருந்ததாகவும், அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பி சொருகியதுடன், கை-கால்கள் கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

நிலத்தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் இந்த பாதக செயலை அரங்கேற்றியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் அந்த கும்பலை சேர்ந்த 4 ேபரை போலீசாரும் கைது செய்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறிய நிர்பயா சம்பவம் போல, நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வாக்குமூலத்தில் முரண்பாடு

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் பெரிய அளவில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதை நேற்று முன்தினம் காசியாபாத் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக அந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு போலீசார் அறிக்கை அளித்து உள்ளனர். அதன்படி நிலத்தகராறு காரணமாக அந்த 5 பேரை போலீசில் மாட்டி விடுவதற்காக நடந்த நாடகம் இது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பரபரப்பாக்குவதற்கு பணம்

இதற்காக கற்பழிப்பு செய்தியை ஊடகங்களில் பரபரப்பாக்குவதற்காக ரூ.5 ஆயிரம் கைமாறப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதைப்போல, அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டு பொருள் எதுவும் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டவில்லை என கூறியுள்ள போலீசார், டெல்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் சாதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அந்த பெண்ணின் உடல்தகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இரண்டொரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.

அதேநேரம் அவரது உடலில் இருந்து உயிரணு எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் அவர் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த தகவல்களை டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

பெண்ணின் கூட்டாளிகள் கைது

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பெண்ணின் கூட்டாளிகளான 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வரும் அவர்கள், இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கற்பழிப்பு புகார், வெறும் நாடகம் என போலீசார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்