பக்கத்து குடியிருப்பை சுற்றி பார்க்க சென்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுமி
|பெங்களூருவில் பக்கத்து குடியிருப்பை சுற்றி பார்க்க சென்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலெக்ட்ரானிக் சிட்டி:
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தம்பதி, தம்பியை பள்ளியில் விட்டு வருவதாக கூறி 8 வயது மகளை வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மகளுக்கு என்ன ஆனதோ என பதற்றமான சிறுமியின் பெற்றோர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு தகவல் கொடுத்ததுடன், போலீசாருக்கும் தகவல் பறந்தது. உடனே அக்கம்பக்கத்தினரும், போலீசாரும் சிறுமியை தேடினர். அப்போது பக்கத்து குடியிருப்பில் இருந்து சிறுமி ஓடி வந்தாள்.
தன்னை உணவு விற்பனை பிரதிநிதி ஒருவர் கடத்த முயன்றதாகவும், அவரது கையை கடித்துவிட்டு தப்பி வந்ததாகவும் கூறினாள். அந்த சமயத்தில் அங்கு ஒரு உணவு விற்பனை பிரதிநிதி, ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவு கொடுக்க வந்தார். சிறுமி கூறிய கருத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கு கூடியிருந்தவர்கள், திடீரென்று அந்த உணவு விற்பனை பிரதிநிதியை பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுமியை கடத்தவில்லை என்பதும், அவர் அப்பாவி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பக்கத்து குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி லிப்ட் மூலம் பக்கத்து குடியிருப்புக்கு செல்வதும், அங்கு அவர் சுற்றித்திரிந்ததும், தன்னை பெற்றோர் தேடியதும் தன்னை கடத்த முயற்சி நடந்ததாக கூறியதும் போலீசாருக்கு தெரியவந்தது. பெற்றோர் வீட்டில் இருக்கும்படி கூறி சென்றதும், கதவை பூட்டிய சிறுமி பக்கத்து குடியிருப்பை சுற்றிப்பார்க்க லிப்ட் வழியாக சென்றதும், பெற்றோரிடம் மாட்டியதால் கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமிக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.