முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா பா.ஜனதாவில் சேர திட்டமா?
|முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோலார் தங்கவயல்:
முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.எச்.முனியப்பா
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக திகழ்பவர் கே.எச்.முனியப்பா. முன்னாள் மத்திய மந்திரியாக இரண்டு முறை இருந்த இவர், கோலார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 7 முறை எம்.பி. ஆனார். கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது.
இதன்காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவருக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் பணியாற்றியதாக தெரிகிறது. இதனால் கே.எச்.முனியப்பா தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.
எதிர்ப்பு
இதனால் கே.எச்.முனியப்பா ஆதரவாளர்கள் மற்றும் ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தராமையா ஆகிய இருவரும் கே.எச்.முனியப்பாவையும், ரமேஷ்குமாரையும் நேரில் அழைத்து சமாதான முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கே.எச்.முனியப்பாவுக்கு எதிராக செயல்பட்ட சுதாகர், முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சுநாத்கவுடா ஆகியோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கக்கூடாது என்று கே.எச்.முனியப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
கடுமையாக விமர்சித்தார்
இவரின் எதிர்ப்பையும் மீறி முல்பாகலை சேர்ந்த சுதாகர் மற்றும் மஞ்சுநாத் கவுடா, எம்.எல்.ஏ. சீனிவாசகவுடா ஆகியோரை டெல்லிக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைமை அழைத்துச் சென்றது.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி முன்னிலையில் சுதாகர், மஞ்சுநாத்கவுடா, சீனிவாசகவுடா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதனால் மேலும் கோபம் அடைந்த கே.எச்.முனியப்பா கர்நாடக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
விருந்து
இந்த நிலையில் நேற்று கே.எச்.முனியப்பா தனது சொந்த ஊரான சி்க்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா கம்பதஹள்ளியில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் மந்திரி கே. சுதாகர், கோலார் மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடசிவா ரெட்டி, சிந்தாமணி எம்.எல்.ஏ. ஜே.கே.கிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.பி. நாராயணசாமி உள்ளிட்ட பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டர். அப்போது, கே.எச்.முனியப்பா பா.ஜனதா கட்சியில் இணைவது குறித்து மந்திரி சுதாகரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.